×

சிதம்பரம் நடராஜர் கோயிலில் பஞ்சமூர்த்திகள் தேரோட்டம் : இன்று ஆருத்ரா தரிசன விழா

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா திருவிழாவை முன்னிட்டு நேற்று பஞ்சமூர்த்திகள் தேரோட்டம் நடைபெற்றது. இன்று ஆருத்ரா தரிசனம் நடப்பதால் ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். பூலோக கைலாயம் என்று அழைக்கப்படும் சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மற்றும் ஆனி மாதங்களில் தேரோட்ட திருவிழா மற்றும் தரிசன விழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைதொடர்ந்து தினமும் பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடந்தது.

இந்நிலையில் நேற்று காலை தேரோட்டம் நடந்தது. சிறப்பு பூஜைகளுக்குபின் விநாயகர், முருகன், நடராஜர், சிவகாமசுந்தரி, சண்டிகேஸ்வரர் ஆகிய 5 சுவாமிகளும் அலங்கரிக்கப்பட்ட தனித்தனி தேர்களில் வைக்கப்பட்டு நான்கு மாட வீதிகளையும் வலம் வந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து அரோகரா அரோகரா கோஷம் விண்ணை பிளக்க தேர் இழுத்தனர். தேருக்கு முன்பாக பெண்கள் 4 வீதிகளிலும் அழகிய கோலமிட்டபடி சென்றனர். நேற்றிரவு தேர் நிலைக்கு வந்தவுடன் நடராஜர், சிவகாமசுந்தரி சமேதராக ஆயிரங்கால் மண்டபத்தில் வைக்கப்பட்டு லட்சார்ச்சனை நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று மதியம் 2 மணியளவில் நடராஜர், சிவகாமசுந்தரி சமேதமாக ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து நடனம் ஆடியபடியே வெளியே வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பர். ஆருத்ரா தரிசன விழாவில் பங்கேற்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.


Tags : Chidambaram Natarajar Temple Chidambaram Natarajar Temple , Panchamurts , Chidambaram Natarajar Temple
× RELATED சிதம்பரம் நடராஜர் கோயிலில் பெண்...